Thursday, September 24, 2009

பாவம் என் பாரத தேசத்து இளைஞர்கள்...

பாவம்
என் பாரத தேசத்து இளைஞர்கள்.
உறக்கத்தை தொலைத்து விட்டு
கனவுகளுக்கு கல்லறை கட்டுபவர்கள்.


நம்பிக்கையோ எங்களிடம்
நாளுக்கு நாள்
இளைத்து கொண்டிருக்கும்
எய்ட்ஸ் நோயாளியை போல.


புண் பட்ட மனதை
புகை விட்டு ஆற்றவேண்டுமாம்!
ஆகையால்
அனேக நேரங்களில்
சிகரெட்டுடன் மட்டும்
சிநேகம் வைத்துள்ளோம்.


நன்றிக்கடன் பட்டிருப்போம்
நாள் முழுதும் உங்களுக்கு
பசிக்கு பழக்கப்படுத்த - எந்த
பல்கலைக் கழகமாவது
பாடத்திட்டம் வகுத்துள்ளதா
என எவெரேனும் பார்த்து சொன்னால்
நன்றிக்கடன் பட்டிருப்போம்
நாள் முழுதும் அவர்களுக்கு.


வருத்தப்படுகிறோம்
பல்கலைகழக பட்டங்களை வைத்து
வாழ்க்கை புத்தகத்தில் வரி கூட
வாசிக்க முடியாமல் போனதற்கு.


"தனித்திருக்கிறோம்"
வேலைக்காக பட்டங்களை பார்க்காமல்
பணம் கேட்கும் இந்த சமுதாயத்திலிருந்து


"விழித்திருக்கிறோம்"
கட்டிய கோவனங்களையாவது
காப்பாற்ற வேண்டும் என்ற கவனத்தோடு.


"பசித்திருக்கிறோம்"
வேலை கிடைக்காததால்


எல் டோரடோக்கள்
எங்களுக்கு தேவை இல்லை
பசித்து அழும் எங்கள் வயிற்றுக்கு
பாதியாவது சோறிட
வேலை ஒன்று தான் கேட்கிறோம்


"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்"
அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து
அசரரீ போல் கேட்டது
"முப்பது ரூபாய் வேண்டும்
முழுச் சாப்பாடு போடுவதற்கு".

0 comments: